செய்யாறு: செய்யாறு அருகே கஞ்சா வைத்திருந்த 3 சாமியார்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனிப்பிரிவு போலீஸ்காரர் முருகன் நேற்று மாலை ஆரணி சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வடதண்டலம் பஸ் நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்துகொண்டு 3 பேர் சாமியார் வேடத்தில் நின்றிருந்தனர். அவர்கள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸ்காரர் முருகன், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் போலீஸ்காரர் முருகன், செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த டில்லிராஜ்(29), விருதுநகரைச் சேர்ந்த சுரேஷ்(49), திருவண்ணாமலையை சேர்ந்த மகாந்த் வீரேந்திரகிரி(47) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் 85 கிராம் கஞ்சா, 5 லிட்டர் தென்னங்கள் ஆகியவை இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்தனர்.
விசாரணையில், நேபாள நாட்டில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும், தென்னங்கள்ளை குடிப்பதற்கு வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அவர்கள், இன்று காஞ்சிபுரத்தில் நடந்த ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்வதற்காக வந்ததும், அங்குள்ள சில நண்பர்கள், காஞ்சிபுரத்திற்கு வருவதாக கூறியதால் அவர்களுக்காக காத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா, தென்னங்கள்ளை பறிமுதல் செய்தனர். கைதான 3 சாமியார்களையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரையும் நேற்றிரவு சிறையில் அடைத்தனர். சாமியார்கள் கஞ்சா வைத்திருந்தபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


