Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பில் 492 மார்க் பெற்ற மாணவியின் குடிசை வீட்டிற்கு 5 நாளில் இலவச மின் இணைப்பு: முதல்வருக்கு குடும்பத்தினர் நன்றி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதியகொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி, தமிழ் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.

மாணவி துர்கா தேவி கூறுகையில், ‘இதேபள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து, அதன் பின்னர் டாக்டராக வேண்டும். தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்ததாகவும், வீட்டிற்கு மின் வசதி கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், 3 மின்கம்பங்கள் புதிதாக போட வேண்டும் என்றும், அதற்கு ₹1 லட்சம் வரை செலவு ஏற்படும் என்றும் மின்துறை சார்பில் தெரிவித்து வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தனது தந்தையால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை. எனவே வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பான செய்தி ‘தினகரன்’ நாளிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து 5 நாட்களுக்குள்ளாகவே அரசு செலவில் கடந்த 14ம்தேதி இரவு மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு மாணவி மற்றும் பெற்றோர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் தாய் சுதா கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்காக அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று வருகிறது. எனது மகள் துர்காதேவி படிப்பிற்காக 5 நாட்களுக்குள்ளாகவே முன்னுரிமை அளித்து, அதுவும் ₹5 ஆயிரத்து 497 டெபாசிட் உட்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வருக்கும், அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எங்களது குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்’ என்றார்.