ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு: 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடிவு, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில் புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிறந்த குழந்தை முதல் 74 வயது வரையிலான வாழ்நாள் முழுக்க புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் 11 பேரில் ஒருவராக இருப்பதாகவும், இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 மண்டல புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்ட 12 மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்களில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கூடிய வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
அதனை தொடர்ந்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரின் பரிந்துரை பரிசீலனைக்குப் பிறகு, புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில், மாநில அரசால் 3 ஆண்டுகளில் ரூ.110.96 கோடி செலவில் இரண்டாம் நிலை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களும், மனிதவளமும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.110.96 கோடியை நிர்வாக ஒப்புதலாகவும், அதில் ரூ.73.96 கோடியை 2025-26 நிதியாண்டுக்கான நிதி ஒப்புதலாகவும், ரூ.19.60 கோடியை 2026-27 நிதியாண்டிற்காகவும், ரூ.17.40 கோடியை 2027-28 நிதியாண்டிற்காகவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக வாங்கப்படும். இதன் மூலம், தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புற்றுநோய் சிக்கலை தடுக்கும் முயற்சியாக, சிறந்த தரமான சிகிச்சை மற்றும் சோதனை வசதிகள் கட்டமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.