ஆன்டாரியோ: கனடாவில் கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டேனியல் ேராஸ் காலின்ஸ் (31), பல்கேரியா வீராங்கனை விக்டோரியா டொமொவா (30) உடன் மோதினார். துவக்கம் முதல் அசுர வேகத்தில் ஆடிய காலின்ஸ், முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றார். அதனால் 2வது சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதர்மெடோவா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பூக்ஸா மோதினர். இருவரும் சம பலத்துடன் மோதியதால், முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் பூக்ஸாவும், 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வெரோனிகாவும் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வெரோனிகா வசப்படுத்தி போட்டியில் வென்றார். அதனால், 2வது சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார்.


