மார்க்கம்: கனடா ஓபன் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிமோடோ அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கனடாவின் மார்கம் நகரில் கனடா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. ஆடவர் ஒற்றையர் போட்டிகளின் தொடர்ச்சியாக நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த்தை (32), ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோ (30) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் கனடா வீரர் விக்டர் லாய் (26), ஜப்பான் வீரர் நரோகாவை (24) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், நிஷிமோடோ, விக்டர் லாய் இடையிலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில் துவக்கம் முதல் நிஷிமோடோவின் ஆதிக்கமே காணப்பட்டது. அதிரடியாக ஆடிய அவர், 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Advertisement