மான்ட்ரீல்: கனடாவில் நடைபெறும் கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் நட்சத்திர வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா (27வயது, 49வது ரேங்க்), கனடாவின் அரியனா ஆர்செனால்ட் (23வயது, 122வது ரேங்க்) மோதினர். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா 6-4, 6-2 என நேர் செட்களில் அரியனாவை வீழ்த்தினார். ஒருமணி 16 நிமிடங்களில் முடிந்த இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் ஒசாகா 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்ரி (30 வயது, 72வது ரேங்க்), கனடா வீராங்கனை கார்சன் பிரான்ஸ்டைன் (24 வயது, 191வது ரேங்க்) களம் கண்டனர்.
முதல் செட்டை சாக்ரி 6-2 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது செட்டை, கார்சன் 6-3 என்ற கணக்கிலும் வசப்படுத்தினர். எனவே 3வது செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினார். இருப்பினும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சாக்ரி அதை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனவே 2 மணி 21 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சாக்ரி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேபோல் ஜெர்மனி வீராங்கனைகள் தட்ஜனா மரியா (37 வயது, 41வது ரேங்க்), லவுரா சீகமண்ட் (27வயது, 24வது ரேங்க்) ஆகியோர் இடையிலான முதல் சுற்று 3 மணி 26 நிமிடங்கள் நீடித்தது. அதில் 2 செட்கள் டை பிரேக்கர் வரை சென்றன. முடிவில் லவுரா 7-5, 6-7 (6-7), 7-6 (7-2) என்ற செட்களில் வெற்றிப் பெற்றார்.