Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: எப்ஐடிஇ(சர்வதேச செஸ் கூட்டமைப்பு) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ்க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்திற்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கனடாவின் டொரண்டாவில் நடந்த எப்ஐடிஇ கேண்டிடேட்ஸ் தொடரில் 17 வயதில், ‘சேலஞ்சராக குகேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி முதல் வீரராக சாதித்துள்ளார். அவர் தனது 12 வயதில் இளம் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றார்.

அவர் நேற்று சென்னை வந்தடைந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அலுவலகத்திற்கு அழைத்து குகேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.15 லட்சம் இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் உலக செஸ் சாம்பியன் ஷிப்புக்கான போட்டியிலும் வெற்றி வாகை சூடிட வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து நிருபர்களிடம் குகேஷ் கூறியதாவது: தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையும் மற்றும் போட்டி முடிந்த பிறகு பரிசு தொகையும் உடனடியாக வழங்கியது மிகவும் மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் எனக்கு பயிற்சி அளித்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதனால் தான், என்னால் இந்த சாம்பியன் ஷிப் பட்டம் வெல்ல முடிந்தது. இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் மணிகண்டன், பொது மேலாளர் மெர்சி ரெஜினா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் குகேஷின் பெற்றோர் உடனிருந்தனர்.