Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரவிந்தோ பார்மா மூலம் பா.ஜவுக்கு பணம் ஜே.பி நட்டாவை கைது செய்ய முடியுமா? அமலாக்கத்துறைக்கு ஆம்ஆத்மி கேள்வி

புதுடெல்லி: அரவிந்தோ பார்மா மூலம் பா.ஜவுக்கு பணம் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஜேபி நட்டாவை கைது செய்ய அமலாக்கத்துறை தயாரா என்று ஆம்ஆத்மி கேள்வி எழுப்பி உள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரவிந்தோபார்மாவை சேர்ந்த சரத்ரெட்டி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரவிந்தோபார்மா நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜவுக்கு ரூ.60 கோடி பணம் வழங்கி உள்ளது. இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடிசி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா, தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக பல சோதனைகள், கைதுகள், இரண்டு வருட விசாரணைகள் நடந்தாலும், எந்தவொரு ஆம் ஆத்மி கட்சி தலைவருக்கு எதிராகவும் அமலாக்கத்துறையால் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியவில்லை.

2 நாட்களுக்கு முன்பு அரவிந்தோ பார்மாவை சேர்ந்த சரத் ரெட்டியின் அறிக்கையின் அடிப்படையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 2022 நவம்பர் 9 அன்று, கெஜ்ரிவாலை தனக்குத் தெரியாது என்று ரெட்டி கூறினார். அவரை அமலாக்கத்துறை கைது செய்த பிறகு அவரது தனது நிலையை மாற்றி எனக்கு கெஜ்ரிவாலை தெரியும் என்று கூறினார். ஆனால் அரவிந்தோபார்மா பணம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜவுக்கு சென்றது. சரத் ரெட்டி நிறுவனம் பாஜவுக்கு ரூ.59.5 கோடி வழங்கியது.

சரத் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜவுக்கு நன்கொடை அளித்தன. இப்போது இந்த பணம் சென்ற விதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நாடு முன் அம்பலமாகியுள்ளது. கலால் வரி விதிப்புக் கொள்கை வகுக்கப்படும் போதே சரத்ரெட்டி 4.5 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினார். மேலும் ரூ. 55 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கினார். அந்தப் பணம் பாஜவுக்குச் சென்றது.

அப்படிப்பார்க்கும்போது பாஜ தனது வங்கிக் கணக்குகளில் குற்ற வருமானத்தை பெற்றுள்ளது. இதற்காக பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும். தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் பொதுவெளியில் வந்ததில் இருந்து பாஜவுக்கு எதிராக கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நாட்டின் வரலாற்றில் பாஜ மிகப்பெரிய அரசியல் ஊழலை செய்துள்ளது என்பதை ஆதாரங்களும் உண்மைகளும் நிரூபிக்கின்றன.

பா.ஜ.வின் இந்த வெளிப்படையான அரசியல் ஊழலை நாங்கள் விரிவாக அம்பலப்படுத்தியுள்ளோம். ஆம் ஆத்மி கட்சி அனைத்து உண்மைகளையும் நாட்டு மக்கள் முன் வைத்துள்ளது. கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர்கள் வேறுவிதமாகக் கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியையும் அதன் தலைவர்களையும் அமலாக்கத்துறை குறிவைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.