புதுச்சேரி: தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி இன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நடந்த போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் தனியார் பஸ், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. அரசு பள்ளி, கல்லூரிகளை தவிர பெரும்பாலான தனியார் பள்ளி, கல்லூரிகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. காரைக்காலில் மாங்கனி திருவிழா, பாகூரில் தேர் திருவிழா நடைபெறுவதால் அங்கு போராட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு எச்சரிக்கை செய்திருந்ததால் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தனர். இந்தியா கூட்டணியினர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா: கேரளாவில் வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு உள்பட பல பகுதிகளில் பணிக்கு வந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடுமையாக பாதிப்படைந்தனர். அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். கேரளாவில் இருந்து நாகர்கோவில், கோவை, பழனிக்கு பஸ்கள் செல்லவில்லை. அதேபோல் பெங்களூரு உள்பட வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களும் களியக்காவிளையுடன் திருப்பி விடப்பட்டன. அதே நேரத்தில், கொச்சியில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
2 கிமீ நடந்த அமைச்சர்
கேரளாவில் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தொழிலாளர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, தனது வீட்டில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்களுடன் நடந்து சென்றார்.