குருகிராம்: அரியானாவில்பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உடல் கருகி இறந்தனர். ஓட்டுனரின் அலட்சியத்தால்தான் 9 பேர் உயிரிழந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் 60 பேர் உபியில் உள்ள மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு பஸ்சில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அரியானா, நூஹ் மாவட்டம், துலாவத் பகுதியில் வந்த போது பஸ்சில் திடீரென தீப்பிடித்தது.
இதை பார்த்த கிராம மக்கள் ஓட்டுனரை எச்சரித்து பஸ்சை நிறுத்துமாறு கூறினர். ஆனால் ஓட்டுனர் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். இதில் பஸ் முழுவதும் தீ பரவி 5 பெண்கள் உட்பட 9 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.17 பேர் படுகாயமடைந்தனர். தீ பரவியதும் ஆண்கள் சிலர் பஸ்சில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதில் உயிர் தப்பிய ராகேஷ் குமார்(60)‘‘ தீப்பிடித்ததும் பஸ்சை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியும் அவர் அதை அலட்சியப்படுத்தி வேகமாக ஓட்டியதால் பஸ்சுக்குள் தீ பரவி 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பையில் இருந்த பணம் மற்றும் நகைகள் தீயில் கருகின’’ என்றார். இதுகுறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.