திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று நடைபெற்று வரும் தொழிற்சங்கத்தினரின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோ, டாக்சிகளும் ஓடவில்லை. இன்று காலையில் திருவனந்தபுரம், பக்தனம்திட்டா, கொல்லம், இடுக்கி உள்பட சில பகுதிகளில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பின்னர் அந்த பஸ்களும் நிறுத்தப்பட்டன. பத்தனம்திட்டாவிலிருந்து இன்று காலை கொல்லத்திற்கு ஒரு கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
வழக்கமாக கேரளாவில் வேலை நிறுத்தத்தின் போது வாகனங்கள் இயக்கப்பட்டால் அவற்றின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசுவது வழக்கம். இதனால் கல்வீச்சுக்கு பயந்து இந்த பஸ்சின் டிரைவர் ஷிபு தாமஸ் தலையில் ஹெல்மெட் அணிந்து பஸ்சை ஓட்டிச் சென்றார். ஆனால் சிறிது தொலைவிலேயே இந்த பஸ்சை அரூர் என்ற இடத்தில் வைத்து போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பஸ்சின் மீது யாரும் கற்களை வீசவில்லை. டிரைவர் ஹெல்மெட் அணிந்து பஸ்சை ஓட்டும் இந்த போட்டோவும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.