Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய பிராட்வே பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் எப்படி ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சராக விரைவாக திட்டங்களை, விரைவான முன்னெடுப்புகளை எடுக்கின்ற முதல்வராக திகழ்கிறாரோ, அவருடைய வேகத்திற்கு ஏற்றார் போல் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தினுடைய செயல்பாடும் வேகமடையும், எவ்வளவு குறுகிய காலத்தில் முடிக்க முடியுமா அவ்வளவு குறுகிய காலத்தில் அனைத்து திட்டங்களும் முடிக்கப்படும்.

சென்னை, பிராட்வே பேருந்து நிலையம் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் பணிகள் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (11.11.2024) சென்னை, பிராட்வேயில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டப்படவுள்ள இடத்தினையும், பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடாக தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்காக இராயபுரம் மண்டலம், வார்டு-60, இப்ராகிம் சாலையில் 3 ஏக்கர் பரப்பளவு கெண்ட துறைமுகத்திற்கு செந்தமான காலி இடத்தினையும், வார்டு-55, ஏழு கிணறு, திடீர் நகர், குளோப் திருமண மாளிகை அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பன்னோக்கு மையத்தையும் மற்றும் வால்டாக்ஸ் ரோடு, ஒத்தவாடை தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடத்தையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி சென்னை தங்க சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டம் துவக்கப்பட்டதால், தமிழக முதல்வர் அவர்களால் ஒட்டுமொத்த அரசு துறைகளும் ஒருங்கிணைந்து வடசென்னை வளர்ச்சிப் பாதையில் கொண்டு போவதற்கும் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பல்வேறு வகையில் குழுக்களை அமைத்து அந்த மக்களினுடைய தேவைகளை அறிந்து அந்த தேவைகளை முழுமையாக நிறைவேற்றி கொடுப்பதற்குண்டான அந்த பணிகளை முன்னெடுத்திருப்பதை மக்களும் ஊடகத்துறையும் நன்கு அறிவீர்கள்.

அந்த வகையில் 75 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை என்றாலே பாரிமுனை தான் மையப்பகுதி என்பார்கள். அந்த காலங்களில் ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படுகின்ற இந்த பகுதிகளில் சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்களுடைய வாழ்வாதார மாற்றம் ஏற்படவில்லை என்ற கருத்தில் கொண்டு வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் எடுக்கப்பட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதில் ஒரு பகுதியாக நம்முடைய பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தமிழக முதல்வர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதால் அந்த வகையில் இன்றைக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) வழியாக அரசினுடைய பங்கு 200 கோடி ரூபாயும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 115 கோடி ரூபாயும், டுபிட்கோ (TUFIDCO) மூலம் 506 கோடி ரூபாயும் மற்றும் சென்னை மாநகராட்சியின் உடைய பங்களிப்போடு சேர்த்து சுமார் 822.70 கோடி ரூபாய் செலவில் இந்த பிராட்வே பேருந்து நிலையம் உருவாக்கப்பட இருக்கின்றது.

குறளகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அதற்கென்று தனியாக 9 மாடி கட்டிடமும், பிராட்வே பஸ் நிலையத்திற்கு தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் அடங்கிய 8 மாடி பேருந்து முனையமும் அதில் வணிக வளாகங்களும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை வெகுவாக முடக்கிவிட தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார். சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் அவர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் இன்று களஆய்வினை மேற்கொண்டோம்.

அந்தப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. அந்த கடைகளை அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்று இடத்தை கொடுப்பதற்கு ஆய்வு செய்திருக்கின்றோம். முன்கூட்டியே இது சம்பந்தமாக அந்த வியாபார பெருமக்களை அழைத்து மூன்று முறை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கூட்டங்களை நடத்திருக்கின்றார். அந்தப் பகுதியில் சாலை ஓரமாக வசிக்கின்ற மக்கள் தங்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் இல்லாததால் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் என்று சாலை ஓரமாக பெரும்பாலான மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய கணக்கினை எடுத்து இருக்கின்றோம். தற்போது வரையில் சுமார் 41 நபர்கள் குடியிருப்புக்காக கண்டறியப்பட்டிருக்கின்றது. மேலும் ஏதாவது விடுபட்டு இருந்தால் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தால் அவர்களையும் அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் மாற்று இடம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு இல்லாமல் சாலையோர வசிக்கின்ற மக்களை பற்றி எந்த காலத்திலும் சிந்தித்ததில்லை தமிழக முதலமைச்சர் அவர்கள்தான் குடிசை மாற்று குடியிருப்புகளை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சேதம் அடைந்த நிலையில் இருக்கின்ற குடியிருப்புகளை மறுக்கட்டுமான பணி மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கடுக்கு மாடிகளுடன் இருக்கக்கூடிய அந்த குடியிருப்புகளின் பரப்பளவு குடும்பத்திற்கு 225 சதுர அடி என்கின்ற நிலையை மாற்றி 400 சதுர அடி என்கின்ற வகையில் இப்பொழுது மறுக்கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு பல்வேறு கட்டப்பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே இருக்கின்ற வீடுகளை விட கூடுதலாக குடியிருப்புகளை உருவாக்கும் அந்த குடியிருப்புகளில் சாலை வரும் வசிக்கின்ற பொருளாதாரத்தில் நடைபெற்றவர்கள் வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கு அந்த குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துறைமுகம் தொகுதியில் மட்டும் நம்முடைய வாட்டர் பேசின் என்று சொல்லப்படுகின்றன வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் 750 குடியிருப்புகளும், அதேபோல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பக்கத்தில் அமைந்திருக்கின்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியிலே 750 குடியிருப்புகள் என்று மொத்தம் 1,500 குடியிருப்புகள் கட்டுவதற்கு டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களாலே அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.

இப்படி வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளில் 218 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. சுமார் 5,044 கோடி ரூபாய் அளவிற்கு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் முழுவதுமாக சென்னையை சார்ந்த பணிகள் என்பதால் பெருநகரத்தின் உடைய மாநகராட்சி ஆணையாளர் அவர்களும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அன்பிற்கினிய காகர்லா உஷா அவர்களும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா அவர்களும், அதேபோல் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனரும், அதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களும், அதேபோல் வருவாய் துறை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுத்துறை போன்ற அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து மாதந்தோறும் தமிழக முதல்வர் தலைமையிலே தமிழகத்தினுடைய துணை முதல்வர் அவர்கள் பங்கேற்கின்ற பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள்.

எடுத்துக்கொள்ளப்படுகின்ற பணிகள் குறிப்பிட்ட ஒரு சில பணிகளை தவிர்த்து மற்ற அனைத்து பணிகளையும் 2025 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். ஆகவே இந்த பணிகளை நிறைவுப்படுத்துவதற்காக தான் கால நேரங்களை பார்க்காமல் இரவு பகல் என்று கருதாமல் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளோடு அரசுத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து இருப்பதால் இந்த பணிகள் வேகமாக நடந்து வடசென்னை வாழ் மக்களுடைய அடிப்படை ஆதாரங்கள் காட்டப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் சுமார் 822.70 கோடி ரூபாய் செலவில் இந்த பிராட்வே பேருந்து நிலையம் உருவாக்கப்பட இருக்கின்றது. இந்த திட்டத்தில் ஏற்கனவே தங்களுடைய வாழ்வாதாரமாக நம்பி தொழில் செய்பவர்களுடைய பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அங்கே குடியிருக்கின்ற மக்களுக்கும் மாற்று இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த பேருந்து நிலையத்தின் செயல்பாட்டில் இருக்கின்ற பேருந்துகள் அந்த பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகள் உடைய நன்மையையும் கருத்தில் கொண்டு அனைத்திற்கும் மாற்று இடம் ஏற்பாடு செய்து இந்த திட்டத்தை துவங்கப்பட இருப்பதால், எவ்வளவு விரைவாக இந்த திட்டத்தை கொண்டு செல்ல முடியுமோ முதலமைச்சர் அவர்கள் எப்படி ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சராக விரைவாக திட்டங்களை, விரைவான முன்னெடுப்புகளை எடுக்கின்ற முதல்வராக திகழ்கிறாரோ அவருடைய வேகத்திற்கு ஏற்றார் போல் இந்த திட்டத்தினுடைய செயல்பாடு வேகமடையும், எவ்வளவு குறுகிய காலத்தில் முடிக்க முடியுமா அவ்வளவு குறுகிய காலத்தில் திட்டத்தை முடிக்கப்படும். இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் (பணிகள்) வ.சிவகிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, மண்டல அலுவலர் .பரிதா பானு, செயற்பொறியாளர் சொக்கலிங்கம், மெட்ரோ இரயில் நிறுவன திட்ட மேலாளர் க.தணிகை செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் ஆசாத், தாஹா நவீன், ராஜேஷ் ஜெயின் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.