Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒருங்கிணைந்த போக்குவரத்து முனைய பணிக்காக பிராட்வே பஸ் நிலையம் ராயபுரத்திற்கு மாற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்துக்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையின் மிக பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வருகிறது. 1964ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்ப காலகட்டத்தில் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

2002ம் ஆண்டுக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இதை தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம், நீதிமன்றம், குறளகம், வணிக வளாகங்கள், பஜார், சந்தைகள் என மக்கள் கூடும் இடமாக நகரின் முக்கிய பகுதியாக பாரிமுனை இருப்பதால், நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாக வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மாநகர பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பிராட்வே பேருந்து நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பிராட்வே பேருந்து நிலையம் பழமையான கட்டமைப்புகளுடன் உள்ளதால், அதை இடித்துவிட்டு நவீனமயத்துடன் கட்டமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ₹823 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் ‘‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட இருக்கிறது. பிராட்வே பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது, பயணிகள் வசதிக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத்திடலுக்கு மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக ₹5 கோடியும் ஒதுக்கப்பட்டது. எனினும், தற்போது வரை இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தான், தீவுத்திடலுக்கு பதிலாக பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரம் என்ஆர்டி மேம்பாலம் அருகே தற்காலிமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே, ராயபுரம் அருகே சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் அக்.4ம் தேதி கோரப்பட்டது. இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்றம் செய்யவும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் வரும் 5ம்தேதி தொடங்குகிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். 1,400 ச.மீ. பரப்பளவில் 57 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் பேருந்து நிலையம் அமைய உள்ளது. பயணிகள், பேருந்துகள் இடையூறின்றி வந்து செல்ல 3 நுழைவு பாதைகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பகுதி, கழிவறைகள், டைம் கீப்பர் அறை, குடிநீர், இருக்கை வசதி, மேற்கூரைகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ளது’’ என்றார்.