Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரிக்ஸ் கரன்சிக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு: அதிர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு

வாஷிங்டன்: பிரிக்ஸ் கரன்சிக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கடந்தாண்டு கூட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்து கொள்ள உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது.

பிரிக்ஸ் நாடுகள், தங்களுக்கு இடையே இந்த நாணயத்தை மட்டுமே பயன்படுத்தும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில், பிரிக்சின் கரன்சிக்கு அமெரிக்க அதிபராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர், தனது பதிவில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் உருவாக்க இருப்பதை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயத்தை உருவாக்க கூடாது. ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது. அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள், தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டு விடலாம். யாராவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் வியாபாரம் செய்யட்டும்.

பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்து கொள்ளுங்கள்’’ எச்சரித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். இதைத்தான் தற்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்து உள்ளது.