Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு: சக்தி வாய்ந்த கூட்டணி என புகழாரம்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய நன்மைக்கான சக்திவாய்ந்த கூட்டணி என புகழ்ந்தார். பிரதமர் மோடி 8 நாட்களில் 5 நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் கானா, டிரினிடாட் டொபாகோ மற்றும் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து பிரேசிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். அங்கு ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தங்கும் ஓட்டலில் ஏராளமான இந்திய வம்சாவளிகள் குவிந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடியை பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கைகுலுக்கி வரவேற்றார். இந்த மாநாடு குறித்து மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை ரியோ டி ஜெனிரோவில் நடத்துவதற்காக பிரேசில் அதிபர் லுலாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய நன்மைக்கான சக்திவாய்ந்த கூட்டணி பிரிக்ஸ்’’ என கூறினார். 2 நாள் நடக்கும் இம்மாநாட்டில் பிரதமர் மோடி, ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளில் சீர்த்திருத்தம், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகள், உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மேலும் 5 நாடுகள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டன.

இந்த முறை உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பங்கேற்கவில்லை. ஜின்பிங் கடந்த 2012ல் அதிபராக பதவியேற்றதில் இருந்து முதல் முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். உக்ரைன் போர் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் இருப்பதால் புடின் மாநாட்டிற்கு வரவில்லை. இரு முக்கிய தலைவர்கள் இல்லாமல் நடக்கும் இம்மாநாட்டில் இஸ்ரேல்-ஈரான் போர், காசாவில் மனிதாபிமான நெருக்கடி போன்ற உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்துள்ள வரி தொடர்பான பிரச்னையை கவனமாக கையாள பிரேசில் முடிவு செய்துள்ளது. இதனால் இவ்விவகாரத்திற்கு பிரிக்ஸ் அமைப்பு பெரிய அளவில் முக்கியத்துவம் தர விரும்பவில்லை. இது மாநாட்டின் முக்கியத்துவத்தை குறைப்பதாக அமைந்துள்ளது.

இதற்கிடையே, மாநாட்டின் இடையே பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கூட்டம் ரியோ டி ஜெனிரோவில் நேற்று நடந்தது. இதில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று ரஷ்யா மற்றும் சீன நிதி அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.