தியாகராஜ நகர் : மூளையில் ரத்தக்கசிவு காரணமாக இறந்த தென்காசி ஆட்டோ டிரைவரின் உடல் உறுப்புகள் நெல்லை அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரித்துரை (52). ஆட்டோ டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு காலை சுமார் 8 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிற்பகல் 1.10 மணிக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 22ம் தேதி அவரின் மூளை செயலிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரிதுரையின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை தானமாக அளிக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்வந்தனர்.
இதையடுத்து இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும் மற்றொன்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கருவிழி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் நேற்று காலை 11 மணிக்கு அரசு சார்பில் இறுதி மரியாதையுடன் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.