புதுடெல்லி: பிரம்மபுத்திரா நதி மீது சீனா அணை கட்டி வருவது தொடர்பாக இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனா, இந்தியா, வங்கதேச நாடுகள் இடையே ஓடும் நதி பிரம்மபுத்திரா. இந்த நதியால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பயன் அடைகின்றன. இந்த சூழலில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திராவின் மேல் பகுதியான யார்லுங் சாங்போ நதியின் குறுக்கே சீனா ஒரு மெகா அணையை கட்டத் தொடங்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய அணையாக இந்த அணையை சீனா கட்டி வருகிறது.
இதுபற்றி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: பிரம்மபுத்திராவின் மேல் பகுதியான யார்லுங் சாங்போ நதியின் கீழ்ப் பகுதிகளில் சீனா ஒரு மெகா அணைத் திட்டத்தைத் தொடங்குவது குறித்த நடவடிக்கைகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு பகிரங்கப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சீனாவில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை ஒன்றிய அரசு கவனமாக கண்காணித்து வருகிறது. இதில் சீனாவின் நீர்மின் திட்டங்களை உருவாக்கும் திட்டங்களும் அடங்கும். இருப்பினும் நமது நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவருகிறது. இது பற்றி சீனாவுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
* இஸ்ரேலில் 6,774 இந்திய தொழிலாளர்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 அக்டோபரில் போர் வெடித்த நிலையில் இஸ்ரேலில் எத்தனை இந்தியர்கள் பணி செய்து வருகிறார்கள் என்று மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த பதில்: இரு நாட்டு ஒப்பந்தம் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 6,774 இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர். 2024 மார்ச் மாதம் லெபனானில் இருந்து ஒரு தாக்குதலில் ஒரு இந்திய விவசாயத் தொழிலாளி கொல்லப்பட்டார். அங்கு நடந்த அடுத்தடுத்த தாக்குதலில் 5 இந்தியர்கள் காயம் அடைந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.