அண்ணாநகர்: அயனாவரம் பகுதியை சேர்ந்த தேவி (42), கடந்த 2 நாட்களுக்கு முன், திருமங்கலம் 21வது தெரு வழியாக நடந்து சென்ற போது, அவ்வழியே பைக்கில் வந்த 2 பேர், தேவி கழுத்தில் கிடந்த இரண்டரை சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதேபோல், வண்டலூரை சேர்ந்த பிரசாத் (27), அரும்பாக்கம் பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், அவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து சென்றனர். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரிடமும், 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். புகாரின் பேரில் கோயம்பேடு மற்றும் ஜெ.ஜெ.நகர் போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவனை கைது செய்து, கெல்லீசில் உள்ள சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
Advertisement