Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோபாலபுரத்தில் பாக்சிங் அகாடமி.. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கத்தின் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விளையாட்டுத்துறை கட்டமைப்பை தமிழ்நாடெங்கும் அதிகரித்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களுடைய உத்தரவின் பேரில் தொகுதி தோறும் சிறு விளையாட்டு அரங்கம் – Mini Stadium அமைக்கின்ற திட்டத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில், நம்முடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமையவுள்ள மினி ஸ்டேடியத்துக்கான கட்டுமானப் பணிகளை இராயப்பேட்டையில் இன்று நேரில் ஆய்வு செய்தோம். உடற்பயிற்சிக்கூடம் - பார்வையாளர் மாடம் உட்பட பல்வேறு வசதிகளுடன் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த மினி ஸ்டேடியம், தொகுதியில் விளையாட்டு வீரர்களின் திறமையை வளர்த்தெடுக்க நிச்சயம் துணை நிற்கும். இதற்கான பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினோம்,"இவ்வாறு தெரிவித்தார்.

அதே போல் மற்றொரு பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய உத்தரவின் பேரில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.7.79 கோடி மதிப்பில் கோபாலபுரத்தில் கட்டப்பட்டு வரும் பாக்சிங் அகாடமியை இன்று நேரில் ஆய்வு செய்தோம். சர்வதேச தரத்தில் கிட்டத்தட்ட 790 இருக்கைகள் மற்றும் அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ள இந்த பாக்சிங் அகாடமியை முதலமைச்சர் அவர்கள் விரைவில் திறந்து வைக்கவுள்ள நிலையில், இறுதிகட்ட பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான குத்துச்சண்டைக்கு மிகப்பெரிய களமாக கோபாலபுரம் பாக்சிங் அகாடமி அமையவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.