*தடுத்து நிறுத்திய கட்சியினர்
தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தை வருவாய்துறையினர், நெடுஞ்சாலைதுறையினர் இடிக்க முற்பட்ட போது கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.திருவிளையாட்டம் கடைவீதியில் ஒரு கட்டிடத்தில் 40 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.
அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதாக கூறி வருவாய்துறை, நெடுஞ்சாலைதுறை மற்றும் போலீசார் தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ் தலைமையில் நேற்று காலை திடீரென வந்து ஜேசிபி மூலம் இடிக்க முற்பட்டனர். இதனை தடுத்த கட்சி தொண்டர்களையும் அப்பறபடுத்தினர்.
தகவல் அறிந்து சிபிஎம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டனர். கட்சி அலுவலகத்தை இடிக்க கூடாது என்று கடுமையாக ஆட்சேபித்தனர். அந்த இடம் குறித்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு விசாரணையில் உள்ளது. நீதிமன்ற அனுமதி இன்றி இடிக்க கூடாது என்று ஆட்சேபித்தனர்.
அதை தொடர்ந்து இடிப்பதை கைவிட்டு வருவாய்துறையினரும், நெடுஞ்சாலைதுறையினரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடிக்கபட்ட இடத்தில் கீற்றுகளால் அடைத்து அலுவலகத்தை சரி செய்தனர். இதே போல் இதற்கு முன்பு இரண்டு முறை இடிக்க வந்து வருவாய்துறையினரும் நெடுஞ்சாலைதுறையினரும் திரும்பி சென்றது குறிப்பிடதக்கது.