துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ பாகம்-2 நூல் வெளியீட்டு விழா: பிரபல எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதியுள்ள ‘அவரும் நானும்’ (இரண்டாம் பாகம்) நூலின் வெளியீட்டு விழா நேற்று சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி வரவேற்றார். உயிர்மை பதிப்பகம் சார்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதிப்பாளர் உரை நிகழ்த்தினார். பத்திரிகையாளர் லோகநாயகி நூல் அறிமுக உரையாற்றினார். பிரபல எழுத்தாளர் சிவசங்கரி நூலினை வெளியிட, டாபே குழுமத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் மல்லிகா சீனிவாசன் முதல் பிரதியை பெற்றார். துர்கா ஸ்டாலினின் பேரன்கள் இன்பன் உதயநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா, நிலானி சிறப்பு பிரதியை பெற்றனர்.
விழாவில் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய மேல் முறையீட்டு ஆணைய தலைவருமான பவானி சுப்பராயன், கோவை சந்திரா, ஜி.ஆர்.ஜி. நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். துர்கா ஸ்டாலின் ஏற்புரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் பல்வேறு பணிகள் இருந்தாலும், ஒரு கணவராக எனக்கு நேரம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாது, தனக்கு கிடைத்த நேரத்தில் இந்த நூலை முழுவதும் படித்து, எனக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி, இந்த நூலுக்கு அன்பு உரையும் எழுதி கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரால் வரமுடியவில்லை என்றாலும், மனம் முழுவதும் இங்கு தான் இருக்கும். நேரலையில் முழு நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கும் எனது கணவருக்கு முதல் நன்றி.
சொல்லபோனால்,‘ கண்டிப்பாக நீ இந்த நிகழ்ச்சிக்கு சென்று நல்லபடியாக நடத்திவிட்டு வா‘ என்று என்னை வாழ்த்தி அனுப்பியதும் அவர் தான். பத்திரிகையில் வெளிவந்த 2 பாகங்களுக்கு பிறகு, என்னுடைய கணவர் முதலமைச்சரான பிறகான நிகழ்வுகளை புதிய அத்தியாயங்களாக இதில் சேர்த்துள்ளோம். இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்கு தான். மனப்பூர்வமாக, முழுமையாக எனக்கு ஆதரவு அளித்து, ‘நீ எழுது துர்கா’ என சொல்லி உற்சாகப்படுத்திய எனது கணவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல். எப்போதும் என்னுடைய கணவர் உங்களில் ஒருவன் நான் என்று சொல்லுவார். நூலும் அதே தலைப்பில் வெளியிட்டார். அதேபோல், நானும் உங்களில் ஒருத்தியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். உயிர்மை நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்தின் நன்றியுரையாற்றினார். முன்னதாக கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது.