Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நண்பனை விடுவிக்காவிடில் வெடிகுண்டு வீசி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம்: கட்சி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்

பெரம்பூர்: வெடிகுண்டு வீசி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்துக்கு கடிதம் வந்துள்ளது. இது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம்தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட சுமார் 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்துக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலை ஆம்ஸ்ட்ராங்கின் உதவியாளர் செல்வம் என்பவர் வாங்கி படித்துள்ளார். அந்த கடிதத்தில், ‘’ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி கொலை செய்யப்போகிறோம். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் குண்டுவீசி கொலை செய்யப்போகிறோம். கைது செய்துள்ள எனது நண்பனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து செல்வம், அந்த கடிதத்தை செம்பியம் காவல்நிலையத்தில் கொடுத்து புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த கடிதம் படூர் பஜனை கோயில் தெருவில் உள்ள சதீஷ் (39) என்ற முகவரியில் இருந்துவந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த குறிப்பிட்ட நபரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ் கூறுகையில், ‘’எனது பெயரை பயன்படுத்தி வேறு யாரோ கடிதம் அனுப்பியுள்ளனர்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சதீசுக்கும் அந்த கடிதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் சதீஷிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.