Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்சிக்குள் விமர்சனம் எழுந்ததால் பாஜவை தவிர்த்தது 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பாமக போட்டி: வலுவான திமுக கூட்டணியை எதிர்த்து களமிறங்குகிறது

சென்னை: ஏறத்தாழ 13 ஆண்டுகளாக இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்த பாமக, தற்போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. பாமக வேட்பாளராக சி.அன்புமணியை களத்தில் இறக்கியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சி பண பலத்தையும், அதிகார பலத்தையும் பிரயோகித்து வெற்றி பெறுவதாக பாமக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் யாரேனும் உயிரிழந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக பதவியை இழந்தாலோ, அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ.,வாக அல்லது எம்பியாக நியமிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனால், இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என 13 ஆண்டுகளுக்கு முன்பு கொள்கை முடிவெடுத்த பாமக, அதன் பின்னர் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்த்தது. கடைசியாக, 2010ம் ஆண்டு நடந்த பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், அதிமுகவை விட 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் 23 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. அப்போதைய அதிமுக ஆட்சியை தக்க வைப்பதற்கான முக்கியமான இடைத்தேர்தலாக இது பார்க்கப்பட்டது. பாமகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்த நிலையில், அதில், பாமக போட்டியிடாமல், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின் 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில், 2016ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட பாமக, 41 ஆயிரத்து 428 வாக்குகள் அதாவது 23.19 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அதன் பின்னர், பாமக நேரடியாக போட்டியிடாத நிலையில், பாமக ஆதரவுடன் களமிறங்கிய அதிமுக 2019 இடைத்தேர்தலில் வெற்றியையும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியையும் பெற்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் பாமக தொண்டர்கள் சோர்ந்திருந்த நிலையில், பாமகவுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், பாஜ போட்டியிட்டால், நிச்சயம் தோல்வியை தழுவும். எனவே, நாமே இந்த தொகுதியில் போட்டியிடலாம் என பாமக முடிவெடுத்தது. மேலும், கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் பலரும் பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையை தளர்த்தி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை பாமக எடுத்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும், பாமக சுமார் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 3ம் இடத்தை பிடித்தது. இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைத்தேர்தலில் களமிறங்கும் பாமக, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.