கூடுதல் தொகுதி கேட்க தடபுடல் விருந்து வைக்கும் மலராத கட்சியின் தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதுபற்றி இப்போதைக்கு பேச வேண்டாமே என்று அதி முக்கிய தலைவரின் காதுக்கு கொண்டு போக போறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியும், மலராத கட்சியும் கூட்டணி வைச்சுதுல இருந்து தொடர்ந்து சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இருக்கு.. அதுவும், தமிழ்நாட்டில எங்க கூட்டணி ஆட்சிக்கு வந்தா, மலராத கட்சியும் ஆட்சியில பங்குபெறும் என்று முக்கிய தலைவர் தொடர்ந்து கூறி வர்றார்..
ஏழெட்டு முறை இதுபற்றி சொல்லியும் கூட, இதற்கு சரியாக பதில் சொல்லாமல் இலை கட்சியில சேலத்துக்காரர் தொடங்கி 2ம் கட்ட, 3 ம் கட்ட தலைவர்கள் மவுனமாதான் இருக்காங்க.. இந்த பிரச்னையில கடைசி வரைக்கும் இந்த கூட்டணி நீடிக்குமா என இரு கட்சிக்காரங்களுக்குமே சந்தேகம் வந்துட்டதாம்.. இப்போதைக்கு கூட்டணி ஆட்சிங்கிறத பற்றி பேச வேண்டாமே என்று, மலராத கட்சியின் தமிழக தலைவரு நினைக்கிறாராம்..
இதனை வெளிப்படையாக கட்சி தலைமைக்கு கொண்டு போக முடியாமல், கட்சிக்கு நெருக்கமான ஆடிட்டரு கிட்ட சொல்லி இருக்காரு.. அவரும் இதுபற்றி பேசலாம்னு சொல்லிய நிலையில் தான், முக்கடலும் சங்கமிக்கும் கடைக்கோடி மாவட்டத்துக்கு, அகில இந்திய அளவிலான அந்த அதி முக்கிய தலைவர் வந்து தங்கி இருக்காரு.. இவரை சந்திச்சு விஷயத்தை சொன்னா, போக வேண்டியவர்களின் காதுக்கு போய் சேரும் என நினைத்து ஆடிட்டரும், மலராத கட்சியின் மாநில தலைவரும் கடைக்கோடி மாவட்டத்துக்கு வந்து இருக்காங்க..
எனவே இனி ஆட்சியில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று மலராத கட்சியின் அதி முக்கிய தலைவர் பேச மாட்டார் என நினைக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணி நீறுபூத்த நெருப்பாக இருந்தாலும் இலைக்கட்சி தலைவருக்கு தடபுடல் இரவு விருந்து அளிக்கப்போறாராமே மலராத கட்சி மாநில தலைவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்திற்கு வரும் சேலம்காரருக்கு மலராத தேசிய கட்சியின் அல்வா ஊரின் எம்எல்ஏ தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளாராம்.. அதாவது அல்வா ஊரின் எம்எல்ஏ தேசிய மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், முன்பு இலை கட்சியில் இருந்தவர். மம்மி மறைவுக்கு பிறகு தேசிய கட்சியில் இணைந்து பயணத்தை தொடங்கினார். 2021 சட்டமன்ற தேர்தலில் அல்வா தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப்பெற்றவர் எம்எல்ஏவாகி விட்டார். பின்னர் தேசிய கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் உயர்ந்தார்.
தற்போது தேசிய கட்சியும், இலை கட்சியும் மீண்டும் ஒட்டிக் கொண்ட நிலையில், சேலம்காரர் தேர்தல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து வலம் வந்துக்கிட்டு இருக்கிறார். வரும் 3ம் தேதி அல்வா மாவட்டத்திற்கு சேலம்காரர் வர்றாராம்.. அவரை தனது புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்று இரவு தடபுடல் விருந்து அளிக்க மலராத கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ ஏற்பாட்டில் இறங்கி இருக்கிறாராம்..
மலராத கட்சி கூட்டணியை இலை கட்சியினர் நீறுபூத்த நெருப்பாக கருதி வரும் நிலையில், அல்வா ஊரின் எம்எல்ஏ சேலம்காரரை வளைத்துப் போட இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறாராம்.. இதன் மூலம் இலை கட்சியின் சேலம் காரருடன் தனது நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம், தொகுதி பங்கீட்டில் நாம் கேட்கும் தொகுதியை பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது திட்டமாம்.. விருந்தெல்லாம் சரி, அவரது திட்டம் பலிக்குமா, கூட்டணி சட்டமன்ற தேர்தல் வரை நீடிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயில் விஜிலென்ஸ் மழுங்கி போக, ஆபீசர்ஸ் சில பேர் ரொம்ப ஹேப்பியாக இருக்காங்களாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரில் சென்ட்ரல் ஜெயில் இருக்கு.. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை வச்சியிருக்காங்க.. இங்கிருக்கும் செல்வாக்குள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயிட்டே இருக்குதாம்..
சமீபத்தில் பாலியல் வழக்கில் கைதான செல்வந்தர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசிய ஆடியோ வெளியாச்சுதாம்.. அதனை ஜெயில் அதிகாரிகள் இல்லைன்னு சொன்னாங்க.. எஸ்கார்டுக்கு அழைச்சிக்கிட்டு போன காவலர்களும் மறுத்தாங்க.. கடைசியில ஜெயில்ல இருந்து தான் பேசியது உறுதியாச்சாம்.. அதே நேரத்துல இந்த ஜெயில்ல சோதனை குழுன்னு ஒன்னு இருக்குதாம்.. இவர்கள் கைதிகளுக்குள்ளே இன்பார்மர்களை வைத்து செல்போன்களை பறிமுதல் செஞ்சி வந்தாங்களாம்..
ஆனால் யாரும் சோதனை செய்ய கூடாதுன்னு சில அதிகாரிகள் அன்போடு சொல்லிட்டாங்களாம்.. செல்போனை பறிமுதல் செய்த வார்டருக்கு கடும் மிரட்டல் விடுத்தாங்களாம்.. இதனால நரி எந்த பக்கம் போனால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் சோதனைக்குழுவினர் இருக்காங்களாம்... அதோடு ஜெயில் விஜிலென்ஸ் ஒன்று இருக்குதாம்.. ஆரம்பத்தில் நெருப்பாக வேலை செஞ்ச அந்த விஜிலென்சுக்கு தற்போது விழிப்பு இல்லாம போச்சுதாம்..
அதில் பணியாற்றுவோர் ஜெயில் வாசல் வரை வருவதும் போவதுமாகவே இருக்காங்களாம்.. அவர்களுக்கென வெளியே ரியல் எஸ்டேட், கார் டீலிங் என ஏராளமான வேலை இருக்குதாம்.. இதனால அவர்களும் பெரியதாக கண்டுக்கிடுவது இல்லையாம்.. இதனால சில ஜெயில் ஆபீசர்ஸ் ரொம்பவே ஹேப்பியா இருக்காங்களாம்.. இந்த விஜிலென்சின் பணிகள் ஏன் இப்படி மழுங்கி போச்சுன்னு சென்னைக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்னு போயிருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.