நிர்வாக திறமையின்மையால் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகள் ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் ஒன்றிய பாஜ அரசின் அலட்சியம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றச்சாட்டு
சென்னை: ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் ஒன்றிய பாஜ அரசின் அலட்சியத்தாலும், நிர்வாக திறமையின்மையாலும் அடிக்கடி ரயில் விபத்துகள் நடக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. கட்டணங்களில் மட்டும் பயணிகள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டு, பயண பாதுகாப்பு உட்பட அனைத்து சேவை வழங்குவதிலும் படுமோசமான நிலையே நீடிக்கிறது. ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து, சேவைகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை கைவிட்டு, பாஜ ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இந்தியாவில் தொடரும் ரயில் விபத்துகளின் தொடர்ச்சியாக தற்போது தெற்கு ரயில்வே எல்லைக்குள் நடைபெற்றுள்ள இந்த விபத்து, நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. ஓரளவு பாதுகாப்பாக உணரப்பட்ட தெற்கு ரயில்வே கட்டமைப்பிலும் விபத்துகள் அதிகரிப்பதை எச்சரிக்கையாக உணர்த்துகிறது. 6 நாட்களுக்கு ஒரு விபத்து என்ற விதத்தில் ரயில்வே துறை இருப்பது மிக மிக ஆபத்தானதாகும். ஒன்றிய பாஜ அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பதை சுட்டிக்காட்டுவதுடன் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


