Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜவின் அச்சுறுத்தல் சித்ரவதையே வேட்பாளர் வாபசுக்கு காரணம்: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

ஷிவ்புரி: பாஜவின் அச்சுறுத்தல்கள், சித்ரவதையால்தான் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் மனுவை திரும்ப பெற காரணம் என காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது. மத்தியபிரதேசத்தின் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் கடந்த 19, 26 ஆகிய தேதிகளில் 12 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு மே 7, 13 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் இந்தூர் தொகுதியில் பாஜ கடைசி கட்டமாக மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய நிலையில், 26ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது, வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று முன்தினம்(ஏப்.29) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தூர் தொகுதியில் தற்போதைய மக்களவை உறுப்பினர் சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் அக்ஷய் காந்தி பாம் நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வேட்பாளராகஅக்ஷய் காந்தி பாம் நேற்று முன்தினம் மத்தியபிரதேச பாஜ பேரவை உறுப்பினரான ரமேஷூடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, தன் வேட்பு மனுவை திரும்ப பெற்றார். தொடர்ந்து அவர் பாஜவில் இணைந்தார். இதனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் இதர வேட்பாளர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பதால் பாஜ வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி கூறும்போது, “அக்ஷய் காந்தி பாம் மீது கடந்த 2007 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி அக்ஷய் காந்தி பாம் மீது கொலை முயற்சி வழக்கு சேர்க்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கில் அவரும், அவரது தந்தை காந்தி லாலும் மே 10ம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அக்ஷய் காந்தி பாம் மிரட்டப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு வகைகளில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பயந்து பாம் வேட்பு மனுவை வாபஸ் பெற்று பாஜவில் சேர்ந்துள்ளார்” என்று குற்றம்சாட்டி உள்ளார். மேலும் ஜித்து பட்வாரி கூறும்போது, “நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. ஜனநாயகம், அரசியலபை்பு, இடஒதுக்கீடு ஆகியவை தொடர்ந்து வலுவாக இருக்க ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பாஜவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.