Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை.. வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : பி.ஜே.டி.யின் நவீன் பட்நாயக் அதிரடி அறிவிப்பு!!

புபனேஸ்வர் : நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு எடுத்துள்ளது.ஒடிசாவில் நடந்து முடிந்த 2024 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார். மக்களவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்முறை எழுச்சி பெற்று ஆட்சியை பிடித்தது. மக்களவையிலும் பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டில் அதிரடி மாற்றத்தை நவீன் பட்நாயக் கொண்டு வந்துள்ளார்.

9 மாநிலங்களவை பி.ஜே.டி. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக், இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். . மேலும் பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்றும் ஒடிசா மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை உரிய முறையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு நவீன் பட்நாயக் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்.

ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் முடிவு எடுத்துள்ளனர். 9 மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம் கட்சியின் முடிவால் ஒன்றிய பாஜக அரசுக்கு புதிய நெருக்கடி அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாவிட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் பாஜகவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு அளித்து வந்தது. ஆனால் இனிமேல் பிரச்சனை அடிப்படையில் கூட பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று பிஜு ஜனதா தளம் திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.