புதுடெல்லி: பாஜ மூத்த எம்பி நிஷிகாந்த் துபேயின் மனைவி அனாமிகா கவுதமின் சொத்துக்கள் அளவுக்கு அதிகமாகவும், மலைப்பூட்டும் வகையிலும் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், ‘நிஷிகாந்த் துபேயின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களின்படி, அவரது மனைவி அனாமிகா கவுதமின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 2009ம் ஆண்டில் ரூ.50 லட்சமாக இருந்தது, 2024ம் ஆண்டில் ரூ.31.32 கோடியாக உயர்ந்துள்ளது’ என்று கூறினார். இது தொடர்பாக, ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் கடந்த மே 24ம் தேதி புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, ஜூலை 24ம் தேதி நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு துபேக்கு லோக்பால் உத்தரவிட்டது. காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘லோக்பாலிடம் அளிக்கப்பட்ட புகார் இன்னும் நிலுவையில்தான் உள்ளது ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
