Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜ அரசை காப்பாற்ற எடப்பாடி நெல் கொள்முதலில் பொய் குற்றச்சாட்டு: புள்ளி விவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தஞ்சாவூர்: பாஜ அரசை காப்பாற்றுவதற்காக நெல் கொள்முதல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என புள்ளி விவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி தந்து உள்ளார்.  தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றப்படுவதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் சக்கரபாணி, டிஆர்பிராஜா, கோவி. செழியன், கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்பி முரசொலி, எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகர், டிகேஜி நீலமேகம், அண்ணாதுரை, மேயர் சன்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஆய்வுக்கு பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: நமது அரசு, விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றி முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியுள்ளார். அதில், திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்து செல்லாததால், அங்கே புதிய நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில் அக்டோபர் 1ம்தேதி தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

ஆனால், நமது ஆட்சியில் கடந்த ஆண்டில் இருந்து டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செப்.1ம் தேதியே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில், 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், எட்டு லட்சம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள் குடோனுக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதம் உள்ள 1,93,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள்ள அந்த பணிகளும் நிறைவடையும். குறிப்பாக, டெல்டாவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்னும் சுமார் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை வைக்கும் அளவிற்கு இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடம் இல்லை என எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு தவறானது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு குறுவை சாகுபடி காலத்தில், மொத்தமாகவே 200 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் தான் திறக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, 300 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  விவசாயிகள் யாரும், எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என இதுவரைக்கும் எந்த புகார் மனுவும் அளிக்கவில்லை. பழனிசாமி மட்டும் தான் பொய் புகார்களை கூறி வருகிறார். நெல்லை எடுத்து செல்ல போதிய லாரிகள் இல்லை என்ற ஒரு புகாரை பழனிசாமி கூறியுள்ளார்.

ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 20,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 16,000 நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதே போல நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டது என்ற ஒரு நாடகத்தை பழனிசாமி நடத்தியுள்ளார். அதில் பெண் ஒருவர் நெல் முளைத்து விட்டது என கவலை தெரிவித்ததாக கூறி இருந்தார். உடனே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணின் ஊரான வரவுக்கோட்டைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில், அந்த பெண் ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் நடவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வயலில் இன்று (நேற்று) மதியம் வரை எந்த அறுவடையும் நடைபெறவில்லை. அறுவடையே நடைபெறாத வயலிலிருந்து அவர் எப்படி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார் என்பது அவருக்கு தான் வெளிச்சம். எனவே, பழனிசாமி கூறிய புகார்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கி விட்டது. ஆனால் நமது அரசு, அந்த அரிசியை வழங்கவில்லை என ஒரு புகாரை பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க ஒன்றிய அரசு கடந்த ஜூலை இறுதியில், ஒரு வழிகாட்டுதல் குழுவை தமிழகத்திற்கு வழங்கியது. வழிகாட்டுதல் வேறு, ஒப்புதல் வேறு. அந்த வழிகாட்டுதலின் படி செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலம் டெண்டர் விடப்பட்டது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஒப்பந்ததாரர்களின் செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரியின் தரப்பரிசோதனை விவரங்களை ஒன்றிய அரசுக்கு நம்முடைய தமிழக அரசு அனுப்பி உள்ளது. ஆனால் இன்று வரை அதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வில்லை.

22 சதவீதமாக ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதனை சரி பார்ப்பதற்காக, 3பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. எனவே, இதையெல்லாம் மறைக்க வேண்டும், பாஜ அரசை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் இந்த புகார்களை எல்லாம் தெரிவித்து வருகின்றார். நமது அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியதால் தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் பங்களிப்பை வேளாண் துறை மட்டும் தந்து கொண்டிருக்கிறது.

இந்த வளர்ச்சி எல்லாம் பொறுத்து கொள்ள முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றார். அதை மக்களோ, விவசாயிகளோ நம்புவதற்கு தயாராக இல்லை. பொய்யை விதைத்து விவசாயிகளுடைய வாக்குகளை எல்லாம் அறுவடை செய்யலாம் என்கிற பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் நடக்காது. ஏன் என்றால், இங்கே நடப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு என்ற டெல்டாகாரன் அரசு என்பதை இங்கு இருக்கக்கூடிய மக்கள் நன்கு அறிவார்கள். விவசாயிகளுக்கு நமது அரசு என்றைக்கும் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஒரு நாளைக்கு எவ்வளவு நெல் மூட்டை கொள்முதல்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘ஒரத்தநாடு புதுார், திருவையாறு, விளாங்குடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யபடுவதாக ஒரு லோடுமேன் கூறியதாக, ஒரு தவறான குற்றச்சாட்டை பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட கொள்முதல் நிலையத்தில் ஒரு நாள் 800 மூட்டைகள் கொள்முதல் செய்து இருந்தால், தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுகிறது என அர்த்தம் கிடையாது. ஆயிரம் மூட்டைகள் அல்லது கூடுதலாக வந்தாலும் கொள்முதல் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது’ என்றார்.

* 8 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள் குடோனுக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

* மீதம் உள்ள 1,93,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது.

* இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள்ள அந்த பணிகளும் நிறைவடையும்.

* ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 20,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 16,000 நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

* செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க ஒன்றிய அரசு கடந்த ஜூலை இறுதியில், ஒரு வழிகாட்டுதல் குழுவை தமிழகத்திற்கு வழங்கியது. வழிகாட்டுதல் வேறு, ஒப்புதல் வேறு.