Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது : ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

சென்னை : மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதி உள்ளனர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய அரசியல் சட்ட பாதுகாப்பு அமைப்பு மே 25-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். தேர்தலை நியாயமாக நடத்தவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யவில்லை என கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம் உள்ளிட்ட 7 நீதிபதிகள் கூட்டாக எழுதி உள்ள கடிதத்தில், "நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்திய விதம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சு தொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது. பாஜக தோற்றால் அரசியல் அமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கக் கூடும். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் அவநம்பிக்கை தருவதாக உள்ளது. குழப்பம் நிறைந்த இந்த சூழல் வன்முறையில் முடியும் ஆபத்தும் உள்ளது. பெரும்பாலான மக்கள் மனநிலையும் இதே கருத்தை பிரதிபலிக்கிறது.

தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையே ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைக்கவேண்டும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைப்பதே இதுவரை இருந்துவரும் நடைமுறை ஆகும். குதிரை பேரம் நடப்பதை தடுக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பிரச்சனை ஏற்பட்டு ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது விபரீத சூழல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும். விடுமுறைக் காலம் என்றாலும் 5 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்சனைகளும் ஏற்படவிடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும்,"இவ்வாறு தெரிவித்துள்ளனர்.