Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஷிவமொக்கா மக்களவை தொகுதியில் பாஜ போட்டி வேட்பாளர் ஈஸ்வரப்பா மனு தாக்கல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மக்களவை தொகுதியில் பாஜ போட்டி வேட்பாளர் ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 28 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.26 மற்றும் மே 7 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. பெங்களூரு உள்பட 14 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில் வடகனரா, தென்கனரா, ஷிவமொக்கா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்நிலையில் ஷிவமொக்கா மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்தரா பாஜ சார்பில் போட்டியிடுகிறார். அதே சமயம் முன்னாள் துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது மகனுக்கு ஹாவேரி தொகுதியில் சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சி தலைமை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, கர்நாடக மாநிலத்தில் பாஜ ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இதை தகர்தெறிய வேண்டும் என்பதால் ஷிவமொக்கா மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போகிறேன் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா, எடியூரப்பா உள்பட தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதை ஈஸ்வரப்பா ஏற்கவில்லை. இந்நிலையில், ஷிவமொக்கா தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்ற ஈஸ்வரப்பா தேர்தல் அதிகாரி குருதத் ஹெக்டேவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கு ஆதரவாக 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். எனது ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று எனக்கு பாஜ செய்த அநீதி குறித்து எடுத்துரைப்பர். ஷிவமொக்கா தொகுதியில் எனது வெற்றி உறுதி’ என்றார். இதற்கு பதிலளித்துள்ள மாநில தலைவர் விஜயேந்திரா, ‘ஈஸ்வரப்பா தனது மனுவை வாபஸ் பெறுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது’ என்றார்.

* மோடி படத்தை பயன்படுத்தி பிரசாரம்

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு கேஎஸ் ஈஸ்வரப்பா கூறியதாவது, ‘ எந்த காரணத்தை முன்னிட்டும் வேட்புமனு வாபஸ் பெறப்போவதில்லை. அது போல் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தையும் பயன்படுத்துவேன். ராகவேந்திராவுக்கு தைரியம் இருந்தால், பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதில், அவரின் தந்தை மற்றும் சகோதரன் புகைப்படத்தை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொள்ளவேண்டும்’ என்றார்.