Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒரு முறை பட்டனை அழுத்தினால் பாஜவுக்கு 2 ஓட்டு வாக்கு இயந்திரங்களில் முறைகேடா? உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்

* தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை பட்டனை அழுத்தினால் பாஜவுக்கு மட்டும் 2 ஓட்டு விழுந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டுகளையும் நூறு சதவீதம் எண்ணி சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று அகர்வால் என்பவர் தொடர்ந்த பொதுநல மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், சங்கர் நாராயணன் ஆகியோர் வாதத்தில், ‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கிறது என்பதை எங்களது தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் அதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. கேரளாவில் காசர்கோடு பகுதியில் மக்களவை தேர்தலுக்காக நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது பாஜவுக்கு ஒரு வாக்கு கூடுதலாக பதிவாகி உள்ளது. இதுகுறித்து கேரளா மாநில செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

மேலும் இந்த விவகாரத்துக்கு ஒரு சாத்தியமான தீர்வு என்னவென்றால், வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள கண்ணாடியை தேர்தல் ஆணையத்தால் மாற்ற முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் எல்லா நேரங்களிலும் அதன் உள்ளே இருக்கும் விளக்கு எரிய வைக்க வேண்டும்.

அதனால் வாக்காளர் சீட்டு வெட்டுவதையும், உள்ளே விழுவதையும் பார்த்து உறுதி செய்ய முடியும்” என்று தெரிவித்தனர். தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், ‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடக்கிறது என்பது வெறும் பயம் மட்டும் தானே தவிர மற்ற எதுவும் கிடையாது அதேபோன்று கேரளாவின் காசர்கோடு பகுதியில் செய்யப்பட்ட மாதிரி வாக்குப்பதிவில் பாஜவுக்கு அதிகமாக ஓட்டு பதிவானது என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள அனைத்து விவரங்களும் முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று வாக்குப் பதிவு இயந்திரம் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இதில் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்குள் எந்த மென்பொருளும் பயன்படுத்தப்படாது. நான்கு மெகா பைட் தரவு சேமிப்பு அமைப்பு மட்டுமே சின்னங்களை சேமித்து வைத்திருக்கும். அதேபோன்று தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தலுக்கு முன்னதாக அதனை முழுமையாக பரிசோதிப்பார்.

தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் அலுவலர் மற்றும் வேட்பாளர்கள் கையெழுத்து ஆகியோரின் குறியீடு அதில் வைக்கப்படும். இதில் போலியான எந்த ஒரு மென்பொருளையும் இணைக்க முடியாது. எனவே வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இருப்பதால்தான் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் அனைத்து விவகாரங்களும் விரிவாக விசாரிக்கப்பட்டு விட்டது என்பதால், இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான விவகாரத்தில் சந்தேகம் என்பதே இருக்க கூடாது. அது இந்த நீதிமன்றத்தின் உள்ளே இருப்பவர்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.

குறிப்பாக இந்த விவகாரத்தில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகிய இரண்டின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் தகவல்களுக்கும், நாடாளுமன்றத்தின் நிலைக்குழு மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை உள்ளிட்டவை தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளது. இதனை ஏன் தலைமை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை என்று புரியவில்லை.

குறிப்பாக ஒரு வேட்பாளர் இரண்டு வாக்குகளை பெற வாய்ப்பு இருக்கிறதா” என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணையம், ‘‘மாதிரி வாக்குப்பதிவு சரியாக நீக்கப்படவில்லை என்றால் மட்டுமே அவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி கண்டிப்பாக இரண்டு வாக்குகள் பெற வாய்ப்பு கிடையாது” என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடந்தால் அதனால் வாக்காளர்களின் தனியுரிமை பாதிக்கப்படும்.

இருப்பினும் அதற்காக பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கு போக முடியாது. அது பிற்போக்குத்தனமாக அமைந்து விடும். குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பாஜவுக்கு கூடுதல் வாக்கு பதிவானது குறித்து விரைந்து விசாரிக்க வேண்டும். இதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்பொருள் வழங்குவதாக கூறுகிறது.

அதில் லாக்கர் மெக்கானிசம் உள்ளதா? மேலும் அதற்கு என்று பயன்படுத்தும் லேப்டாப் பாதுகாப்பானதா?. அதனை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா, இந்த இயந்திரங்களின் மென்பொருள் உற்பத்திக்கு வேட்பாளர் ஆட்சேபனை தெரிவித்தால் அது ஏற்கப்படுமா? இயந்திரங்களின் உற்பத்தியாளருக்கு எந்த பொத்தான் எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் இருக்குமா? இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சாமானியர் எவ்வாறு வாக்களிப்பார்? என்பது போன்ற முக்கிய கேள்விகள் எழுகிறது.

குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறே நடக்காது என்று தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கிறீர்கள், ஆனால் வாக்கு தரவுகளில் மட்டும் எப்படி வித்தியாசம் ஏற்படுகிறது. மேலும் ஈ.வி.எம் இயந்திரங்கள் சிக்கலை ஏற்படுத்தினால் அதனை ஏன் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும் எங்களுக்கு கேள்வி எழுகிறது” என தலைமை தேர்தல் ஆணையத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

* வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடந்தால் அது வாக்காளர்களின் தனியுரிமையை பாதிக்கும்.

* வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறே நடக்காது என தேர்தல் ஆணையம் கூறுகிறது, ஆனால் வாக்கு தரவுகளில் வித்தியாசம் ஏற்படுவது ஏன்?

* வாக்கு இயந்திரங்கள் சிக்கலை ஏற்படுத்தினால் அதனை ஏன் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்? என நீதிபதிகள் உத்தரவில் கேள்வி எழுப்பி உள்ளனர்.