Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜகவும், துணை நிலை ஆளுநரும் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை சிறைக்குள் கொல்ல சதி? ஆம்ஆத்மி எம்பி பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜகவும், துணை நிலை ஆளுநரும் சேர்ந்து சிறைக்குள் கெஜ்ரிவாலை கொல்ல சதி செய்வதாக ஆம்ஆத்மி எம்பி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ெடல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், ‘பாஜகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவும், முதல்வர் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சிறையில் அவரை கொல்ல சதி செய்வதாக தெரிகிறது. கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து ஆளுநர் மற்றும் பாஜக தவறான அறிக்கைகளை வெளியிடுவது, எங்களுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் அவருக்கு இன்சுலின் தேவைப்பட்டது. அப்போது அவர் மாம்பழம், பூரி சாப்பிடுகிறார் என்று தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு இன்சுலின் கொடுக்க மறுத்துவிட்டனர். அப்போது நீதிமன்றம் தலையிட்டதால், அவருக்கு இன்சுலின் கிடைத்தது. எந்த நபர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தும் சாப்பிடாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவார். அவருக்கு ஏதாவது நேர்ந்தால் பதில் சொல்ல வேண்டும். இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

கூடிய விரைவில் டெல்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு தொடருவோம்’ என்றார். முன்னதாக, நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்ளாதது குறித்து துணை நிலை ஆளுநர் சக்சேனா கவலை தெரிவித்ததாகவும், அதைக் கண்டறியுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும் ஆளுநர் அலுவலகத்திலிருந்து, தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.