பாஜ தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமனம்: ஜே.பி. நட்டாவை தொடர்ந்து கட்சி தலைவர் ஆகிறார்?
புதுடெல்லி: பாஜ தேசிய செயல் தலைவராக பீகார் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜ தேசிய தலைவராக கடந்த 2020ல் தேர்வான ஜே.பி.நட்டாவின் பதவி காலம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு ஜே.பி.நட்டாவின் தேசிய தலைவர் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜ தேசிய செயல் தலைவராக பீகார் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் நிபின்(45) நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜ தேசிய பொதுசெயலாளர் அருண் சிங் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பீகார் மாநில அமைச்சர் நிதின் நபினை பாஜ நாடாளுமன்ற கூட்டுக்குழு தேர்வு செய்துள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மற்றும் சிக்கிம் மாநில பாஜ இணைப்பொறுப்பாளராகவும் நிதின் நபின் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஜே.பி.நட்டா தலைவராவதற்கு முன் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். எனவே, விரைவில் பாஜ தலைவர் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும், அதில், நிதின் நபின் பாஜவின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிதின் நபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பாஜ தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “நிதின் நபின் ஒரு கடின உழைப்பாளி, செயல்வீரர். சிறந்த அனுபவமுள்ள இளம் மற்றும் உழைக்கும் தலைவர். 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபின், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற விடாமுயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றியவர். அவரது ஆற்றலும், அர்ப்பணிப்பு உணர்வும் கட்சியை மேலும் வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த நிதின் நபின்?
பீகார் மாநிலம் பாட்னாவில் 1980ல் பிறந்த நிதின் நபின் கயஸ்தா சமூகத்தை சேர்ந்தவர். பாஜ மூத்த தலைவரும், பீகார் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினருமான மறைந்த நவீன் பிரசாத் கிஷோர் சின்ஹாவின் மகன். தந்தையின் இறப்புக்கு பின் தன் 26வது வயதில் முழு நேர அரசியலுக்கு வந்த நிதின் நபின், சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்டவர். நிதின் நபினின் அரசியல் பயணம் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கியது. அப்போது பாட்னா மேற்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக பீகார் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர், தொடர்ச்சியாக 2010, 2015 2020 மற்றும் 2025 ஆகிய பேரவை தேர்தல்களில் பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகாரில் பாஜ வெற்றிக்கான சிறந்த வியூக அமைப்பாளராக அறியப்படும் நிதின் நபின் தற்போது தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உ.பி. பாஜ தலைவராக ஒன்றிய அமைச்சர் நியமனம்
இதனிடையே உத்தரபிரதேச மாநில பாஜ தலைவராக ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோர் முன்னிலையில், இதற்கான அறிவிப்பை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முறைப்படி அறிவித்தார்.


