Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜவுடனான கூட்டணியை முறிக்க ரங்கசாமி முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் என்.ஆர் காங்கிரஸ்-10, பாஜக-6 திமுக-6, காங்கிரஸ்-2, சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றனர். 16 இடங்களை கைப்பற்றி தேஜ கூட்டணி ஆட்சியமைத்தது. 6 சுயேச்சைகளில் 3 பேர் பாஜவுக்கும், பிரச்னைகளின் அடிப்படையில் 3 பேர் என்.ஆர் காங்கிரசுக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர். மூன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தேஜ கூட்டணி ஆட்சி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அமைச்சர் நமச்சிவாயம் எப்படியாவது வெற்றிபெறுவார். காலியாகும் அமைச்சர் பதவியை கைப்பற்றிவிடலாம் என பாஜ எம்எல்ஏக்கள் அரசியல் கணக்குகளை போட்டு வந்தனர். இதனால் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், அமைச்சர் பதவிகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். வாரிய தலைவர் பதவிகளை வழங்க வேண்டுமென ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனால் கடும் கோபமடைந்த ரங்கசாமி, அதிருப்தி பாஜ எம்எல்ஏ க்களை தொடர்பு கொண்டு, எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம், ஏன், இப்போது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே டெல்லி பயணத்தை தவிர்க்குமாறு கூறினர். ஆனால் அவரது சமாதானத்தை ஏற்க மறுத்து,கல்யாணசுந்தரம் தலைமையில் பாஜ எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக், வெங்கடேசன் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு பாஜ தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து, ஒருமுறை கூட கூட்டணி கட்சி கூட்டத்தை ரங்கசாமி கூட்டியதில்லை.

தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் ஆட்சியை நடத்தி வருகிறார். முதல்வர், அமைச்சர்கள் மீது பல்வேறு, முறைகேடுகள், ஊழல் புகார்கள் எழுகிறது. இதுபோன்ற சூழலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க பாஜ எம்எல்ஏக்களுக்கு துளியும் விருப்பமில்லை என்று சரமாரி புகார் அளித்துள்ளனர். பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் ரங்கசாமிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பாஜவுடன் கூட்டணி அமைத்ததில் மாநிலத்துக்கு ஒரு நன்மையும் இல்லை. கடன் தள்ளுபடி செய்தனரா? கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதா? அதோடு தமிழிசை உள்ளிட்ட எந்த துணைநிலை ஆளுநரும் இணக்கமாக செயல்படுவதுபோல பாவலா காட்டினாலும், நிர்வாகத்தை சுதந்திரமாக நடந்த அனுமதிக்கவில்லை. நியமன எம்எல்ஏ, ராஜயசபா எம்பியை பறித்துக் கொண்டனர். அப்படியிருந்தும், கூட்டணியை மக்களுக்காக தொடர்ந்து வந்தோம். ஆனால் இதுபோன்ற நிலை இனிமேல் நீடிப்பது, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒத்துவராது என நெருங்கியவர்களிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஆட்சியை கலைப்பதையும் ரங்கசாமி விரும்பவில்லை. எனவே எதிர்கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவை நாடி ரகசிய தூது விட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையறிந்த பாஜ அமைச்சர்கள் முதல்வரை சமாதானப்படுத்தியும் ஏற்கவில்லையென கூறப்படுகிறது. இது போன்ற நிலைமையில் டெல்லியில் பாஜ கட்சி தலைவர் ஜேபி நட்டாவை, 7 அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் சந்தித்து விட்டனர். இந்தளவுக்கு தனக்கு நெருக்கடி கொடுப்பதால், பாஜவுடனான கூட்டணியை ரங்கசாமி முறித்துகொள்ளலாம் என ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் முதல்வர் ரங்கசாமியை பாஜ தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இன்னும் சில நாட்களில் இந்த பிரச்னை தீர்க்கப்படாவிடில், புதுச்சேரியில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் நிகழக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.