பர்மிங்காமில் 5வது டி20 திக்... திக்... போட்டியில் இங்கிலாந்து வெற்றி வாகை: தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர்
பர்மிங்காம்: இந்திய மகளிர் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி, 3ல் வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 1 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா மட்டும் சிறப்பாக ஆடி 41 பந்துகளில் 75 ரன் விளாசினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழந்து 167 ரன் எடுத்தது. அதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
துவக்க வீராங்கனைகள் சோபியா டங்லீ (46 ரன்), டேனி வையாட் ஹாட்ஜ் (56 ரன்) சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன் குவித்தனர். கேப்டன் டேமி பியுமோன்ட் 30 ரன் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவை என்ற நிலையில், பியுமோன்ட், அமி ஜோன்ஸ் அடுத்தடுத்து அவுட்டானதால் பரபரப்பு நிலவியது. இருப்பினும், கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எக்லெஸ்டோன் எடுத்து அணியை கரை சேர்த்தார். இதனால், இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றபோதும், இந்தியா, 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.