Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாளை முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது பிர்லா கோளரங்கத்தில் சென்னை அறிவியல் விழா

சென்னை: நாளை முதல் 28ம் தேதி வரை பிர்லா கோளரங்கத்தில் சென்னை அறிவியல் விழா நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னையில் உள்ள அறிவியல் நகரத்தின் முதன்மை செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் உயர்கல்வி துறையின் அங்கமான அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று சென்னை அறிவியல் விழாவாகும். சென்னை அறிவியல் விழா 2008ம் ஆண்டு முதல் தமிழக அரசின் ஆதரவுடன் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவினை வெற்றிகரமாக நடத்துவதற்காக முக்கிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திரா காந்தி அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ இயக்குநரகம், புற்றுநோய் நிறுவனம் போன்ற அறிவியலில் தலை சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வருகை புரிந்து சமுதாயத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் காட்சி பொருட்களை வைத்து அவர்கள் பயனடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படும்.

சென்னை அறிவியல் விழாவில் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி அரங்குகள் மற்றும், அறிவியல் செய்முறை விளக்கங்கள், மற்றும் அறிவியல் கருத்துகளை மக்களிடையே எடுத்துச் செல்ல நாட்டுபுற கலைகளான பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் ஆகியன இடம் பெறுகின்றன. இந்த விழா வருகிற 26ம் தேதி (நாளை) முதல் 28ம் தேதி வரை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய (பிர்லா கோளரங்கம்) வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.