Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பீகாரில் தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் பேரவை தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏடிஆர்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ள மனுவில், “தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தன்னிச்சையானது, உரிய செயல்முறை அற்றது. அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 19, 21, 325 மற்றும் 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் விதி 21ஏ ஆகியவற்றின் விதிகளை தேர்தல் ஆணையம் மீறுகிறது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்து, சுதந்திரமான, நியாயமான தேர்தலை சீர்குலைக்க வழி செய்யும். லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஒத்துழைக்க வேண்டாம்

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக தேர்தல் அதிகாரிகள் உங்கள் இடத்திற்கு வரும்போது, ​​வாக்காளர் அடையாள அட்டைகளைத் தவிர வேறு எந்த ஆவணங்களையும் காட்ட வேண்டாம். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி கேட்டுக் கொண்டார். தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’ பீகார் தேர்தலில் ஏழைகளின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை தவறாக நீக்கவோ அல்லது சேர்க்கவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க வேண்டும்’ என்றார்.

* 5 ஆயிரம் கூட்டங்கள் நடத்தி விட்டோம்

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறுகையில்,’ தேர்தல் குழு அரசியல் கட்சிகளுடன் வழக்கமான உரையாடலை நடத்தி வருகிறது. கடந்த நான்கு மாதங்களில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியுடனும் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மொத்தமாக, இதுபோன்ற 5000 கூட்டங்கள் நடத்தப்பட்டன, அதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட 28,000 பேர் பங்கேற்றனர்’என்றார்.