Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 93 மதிப்பெண் பெற்று பீகார் மாநில மாணவி சாதனை: பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு

சென்னை: பல்லாவரம் அருகே 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த மாணவிக்கு, பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தனஞ்சே திவாரி, ரீனாதேவி தம்பதியினர். இவர்கள், கடந்த 2019ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் சென்னை பல்லாவரம் அடுத்த கவுல் பஜாரில் வசித்து வருகின்றனர். தனஞ்சே திவாரி, அதே பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது, 2வது மகள் ஜியாகுமாரி (16). கவுல் பஜார் அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் படு சுட்டி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில், யாரும் எதிர்பாராத வகையில் ஜியா குமாரி 467 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்துள்ளார். குறிப்பாக தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பொதுவாக பிற மாநிலங்களில் இருந்து வந்து கல்வி பயிலும் மாணவ - மாணவிகள் தங்களது தாய் மொழி தவிர தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெறுவதே பெரிய விஷயமாக இருக்கும். அதனை பொய்யாக்கும் விதத்தில், தற்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஜியாகுமாரி, தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவி ஜியாகுமாரி கூறியதாவது: அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் நான் கல்வியை கற்றபோது, முதலில் எனக்கு கடினமாகத் தான் இருந்தது. அதன் பிறகு விடா முயற்சி செய்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் தமிழை எளிதாக கற்றுக்கொண்டேன்.

7 வருடங்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக குடும்பத்துடன் தமிழகம் வந்த நிலையில், பல்லாவரத்தில் தங்கி படிக்கும் சூழல் ஏற்பட்டது. பல்லாவரம் கவுல் பஜார் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்தேன். தமிழில் 97 மதிப்பெண்பெறுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால், 93 மதிப்பெண் தான் பெற்றுள்ளேன். அதிக மதிப்பெண்கள் பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்படிப்பை தொடர உள்ளேன் என்று கூறினார். பீகாரை சேர்ந்த மாணவி, தமிழகத்தில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்றதை அறிந்து, அவள் பயின்ற பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சால்வை அணிவித்து, கேக் வெட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

முதல்வர் பாராட்டு

பீகார் மாணவி ஜியாகுமாரி, தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றதை அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது `எக்ஸ்’ தள பக்கத்தில், ‘தமிழ்நாடு எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை’ என்று மாணவியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.