கோபி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 5,400 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நேற்று தடை விதித்தனர். இந்த தடை உத்தரவானது இன்று 2வது நாளாக நீடித்தது. மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை பவானி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைத்தல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லுதல், பரிசல் பயணம் செய்தலோ கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ள நிலையில் அதன் வழியோரங்களில் உள்ள பங்களாபுதூர், வாணிப்புத்தூர், அடசப்பாளையம், மேவாணி, கொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாபுதூர், கோபி, கடத்தூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கொடிவேரி அணை மற்றும் படித்துறைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.