Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் மும்பை தப்பியோட முயன்ற ஆர்சிபி நிர்வாகிகள் 2 பேர் உட்பட 4 பேர் கைது: கர்நாடக காவல் துறை அதிரடி நடவடிக்கை

பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் வெளிமாநிலம் தப்பியோட முயன்ற ஆர்சிபி நிர்வாகிகள் 2 பேர் உட்பட 4 பேரை கர்நாடக காவல் துறை அதிரடியாக கைது செய்துள்ளது. கடந்த 4ம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி (ஆர்சிபி) தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடுவதற்காக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடினர்.

கர்நாடக மாநில அரசு பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த போதிலும், பெங்களூரு அணி மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான ஏற்பாடுகள் இல்லாததால், ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வெற்றி விழா கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஏற்பட்ட தோல்வி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த துயர சம்பவத்தை அடுத்து, கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, மாநில அரசிடம் வரும் 10ம் தேதிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

பெங்களூரு காவல்துறை, பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி நிர்வாக நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுக்கு எதிராக பிஎன்ஸ் சட்டப் பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிரடி நடவடிக்கையாக, பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா உள்ளிட்ட மூத்த காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதேநேரம் பெங்களூரு அணி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தது.

இந்நிலையில் பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு, பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே மற்றும் டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மேத்யூ, கிரண், சுமந்த் ஆகியோரை கைது செய்தது. நிகில் சோசலே, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மும்பை செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

மேலும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஷங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. இந்த வழக்கு உயர்மட்ட விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது. அதேவேளையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜகவின் விமர்சனத்தை கேவலமான அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளது.