ஓசூர்: பெங்களூரு-ஓசூர் இடையே, மெட்ரோ ரயில் திட்டம் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கையால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பெங்களூருவில் இருந்தும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஓசூரிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு வியாபாரங்களுக்கும் சென்று வருகின்றனர். ஓசூர்-பெங்களூருவுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவு இருந்தாலும், இருமாநில இடையே சாலை வழியாக செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசலால், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு-ஓசூர் இடையே தென்னிந்தியாவில் இரு மாநிலங்களை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து ஆய்வு செய்து ஆலோசனை செய்தது. பின்னர், தமிழக எல்லையில் சென்னை மெட்ரோ நிர்வாகமும், கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு மெட்ரோ நிர்வாகமும் கட்டுமானம், பராமரிப்பு பணிகளை தொடங்க திட்டமிட்டது. இந்த திட்டத்திற்காக வழித்தடம், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து வரைவு திட்டம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் தொழில்நுட்ப காரணமாக சாத்தியமில்லை என பெங்களூரு மெட்ரோ நிர்வாகம், கர்நாடக அரசிடம் அறிக்கை வழங்கி உள்ளது. இதனால், இருமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமில்லை என கைவிடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அனைத்து வழித்தடங்களிலும், 750 வோல்ட் டிசி உயர்மட்ட கேபிள் வசதியில் ரயில்களை இயக்கி வருகிறது. இதே தொழில்நுட்பத்தில் பொம்மசந்திரா முதல் அத்திப்பள்ளி இடையிலான வழித்தடத்திலும் பயன்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மெட்ரோ நிறுவனம் 25 கிலோ வோல்ட் டிசி உயர்மட்ட கேபிள் வசதி மூலம் ரயில்களை இயக்கி வருகிறது. ஓசூர்-பொம்மசந்திரா இடையில் 23 கிலோ மீட்டர் தொலைவுக்கும், இதே தொழில்நுட்பத்தில் இயக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இரு மின்அளவு மாறுபாட்டால் இரு தொழில்நுட்பங்களையும் இணைப்பது, தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளே இறுதி முடிவை எடுக்கும்,’ என்றனர். இதுகுறித்து பெங்களூரு செல்லும் பயணிகள் கூறுகையில், ‘இரு மாநில அரசுகள், பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்து, மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,’ என்றனர்.


