Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கு: ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீதும் புகார்

பெங்களூரு: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணி ஐ.பி.எல். சம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடும் வகையில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 4ம் தேதி பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் நெருங்கிய நண்பரும், ஆர்.சி.பி. அணியின் விநியோகத்துறை தலைவருமான நிகில் சுலே மற்றும் டி.என்.ஏ. நிறுவனத்தின் நிர்வாகிகள் சுனில் மேத்யு, கிரண் மற்றும் சுமந்த் ஆகியோர் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். தங்கள் கடமையை சரிவர கவனிக்கவில்லை என்று கூறி பெங்களூரு காவல்துறை ஆணையர் தயானந்த், கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் உட்பட 5 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்று முதலமைச்சர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் நீக்கப்பட்டார். உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஹேமந்த் நிம்பல்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்ட நெரிசலில் காயமடைந்த ரோலர் கோப்ஸ் மற்றும் வேணு ஆகியோரின் புகாரின் அடிப்படையில் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீதும், கப்பன் பார்க் காவல்நிலையத்தில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே கூட்ட நெரிசலுக்கு விராட் கோலி தான் காரணம் என கூறி கப்பன் பார்க் காவல்நிலையத்தில் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதில் ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுக்கு விராட் கோலி அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும், ஏற்பாடுகளையும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்று புகாரில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தவுடன் விராட் கோலி லண்டன் புறப்பட்டு சென்றது சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இருந்த புகாரும் புகாரும் பரிசீலிக்கப்படும் என்றும், விசாரணையின் போது அது சரிபார்க்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.