Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை தாமதம்: ஒன்றிய அரசு கூறும் காரணங்கள்

டெல்லி: பெங்களூரு-சென்னை இடையேயான அதி விரைவு நெடுஞ்சாலை பணிகள் மழை, நிலம் கையகப்படுத்துதல், திட்ட வடிவமைப்பில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தடைகளை சந்தித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி, மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். பெங்களூரு-சென்னை இடையேயான அதி விரைவு நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்து மாநிலங்களவை திமுக எம்.பி. வில்சனின் கேள்விக்கு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.

மே 2024ல் முடிக்க திட்டமிடப்பட்ட குடிபாலா - வாலாஜாபேட்டை வரையிலான முதற்கட்ட பணிகள் 86.22% அளவுக்கு மட்டுமே முடிந்துள்ளதாகவும், வரும் அக்டோபரில் அது நிறைவடையும் என்று கட்காரி தெரிவித்தார். அரக்கோணம் - காஞ்சிபுரம் வரையிலான சாலை பணியும் 53.56% மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 78.11% நிறைவடைந்துள்ள காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் இடையேயான இறுதிக்கட்ட பணி 2025 டிசம்பருக்குள் முழுமை பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு அருகே NH 48 சாலையை இணைக்கும் திட்டம் 18.82% மட்டுமே நிறைவடைந்துள்ளதால் 2025 ஆகஸ்ட் என நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவை தாண்டி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான மழை, ரயில்வே ஒப்புதல்கள், நிலம் கையகப்படுத்துதலில் சிக்கல், திட்ட வடிவமைப்பில் மாற்றம், ஐ.ஓ.சி.யின் குழாய் மாற்றம், பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகள் போன்றவையே தாமதத்திற்கு காரணம் என நிதின் கட்கரி பட்டியலிட்டுள்ளார். 262 கிலோ மீட்டர் நீள அதிவிரைவு சாலை நிறைவுற்றால் சென்னை - பெங்களூரு இடையேயான வாகன பயண நேரம் வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.