சென்னை: வங்கக் கடலில் புதியதாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், கனமழை பெய்யும் 8 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், சென்னை, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், வடக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவகி, அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மகாராஷ்டிரா-கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால், நேற்று நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதேநிலை இன்றும் நீடிக்கும். 26, 27ம் தேதிகளிலும் மேற்கண்ட பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும், பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் 28ம் தேதி வரையில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். வங்கக் கடல் பகுதியை பொறுத்தவரையில் மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கிமீ வேகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு -மத்திய -வடக்கு வங்கக் கடலின் அனேக இடங்கள், மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.