Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 5வது நாளாக குளிக்க தடை

தென்காசி : தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 5வது நாளாக நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

குற்றாலத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டிய துவங்கியதால் கோடை காலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அருவிகளில் தண்ணீரும் அதிகமாக விழுகிறது. நேற்று பகலில் அவ்வப்போது சாரலும், சில சமயம் பலத்த மழையும் பெய்தது. வெயில் இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருவார காலமாக இதே நிலை நீடிக்கிறது. தொடர் சாரல், மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுகிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. அதேசமயம் கடும் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எப்போது வேண்டுமானாலும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் குற்றாலம் அருவிகளில் 5வது நாளாக நேற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு சிலர் அருவியை ஏக்கத்துடன் பார்வையிட்டு செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சென்றனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் தென்காசி-குற்றாலம் சாலையில் மேலகரம் எழில் நகர் விலக்கு முன்பாக குளத்தின் கரையில் நின்ற ஆலமரம் வேருடன் சரிந்து விழுந்தது.

இந்நிலையில் குடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே நின்ற ஆலமரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மின்வாரியத்தினர், போலீசார் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதுபோல் சிவகாசியைச் சேர்ந்த கார் டிரைவர், பக்தர்களை தென்காசி கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். பக்தர்களை இறக்கிவிட்டு காரை தென்காசி மேல ரதவீதியில் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு நின்ற 25 ஆண்டுகள் பழமையான பன்னீர்மரம் காரின் மீது விழுந்ததில் சேதமடைந்தது. யாருக்கும் காயமில்லை.

புனித நீர் எடுக்க தடையால் பக்தர்கள் எதிர்ப்பு

தென் மாவட்டத்தில் உள்ள கோயில்

களில் நடைபெறும் விழாக்களின் போது குற்றாலம் அருவியில் நீராடி புனித நீர் எடுத்துச் செல்வார்கள். தற்போது அருவியில் பக்தர்கள் குளிப்பதற்கும், புனித நீர் எடுப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக வடக்கு சன்னதி பஜாரில் குற்றாலநாதர் கோயில் சுவர் தெற்கு வாயில் அருகில் உள்ள 24 மணி நேரமும் தண்ணீர் விழும் குழாயில் குளித்துவிட்டு தண்ணீர் பிடித்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

குற்றாலம் பகுதி வியாபாரிகள் கூறுகையில், ‘குற்றாலத்தில் சீசன் என்பது 90 நாட்கள் மற்றும் ஐயப்ப சீசன் காலம் 60 நாட்கள் ஆகும். வருடம் முழுவதும் சீசன் இல்லை‌. இந்த குறுகிய காலத்தில் வருகின்ற சுற்றுலா பயணிகளின் கூட்டத்தில் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து தான் நாங்கள் ஒரு வருட பராமரிப்பு செலவை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

கொரோனா காலம் தவிர்த்து இதுபோன்று தொடர்ச்சியாக 5 தினங்கள் மற்றும் வார கணக்கில் தடை விதிக்கப்படுவது பெரும்பாலும் இல்லை. ஏதேனும் ஒன்றிரண்டு அருவிகளில் தடை விதிப்பார்கள். ஆனால் தற்போது அனைத்து அருவிகளிலும் 24 மணி நேரமும் தடை விதித்து விடுகிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது’ என்றனர்.

முன்னெச்சரிக்ைக நடவடிக்கையால் தடை

காவல்துறை சார்பில் கூறுகையில், ‘அருவியில் குளிக்க தடை குறித்து காவல்துறை மட்டும் முடிவு எடுப்பது இல்லை. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தான் முடிவுகள் எடுக்கப்படுகிறது‌. தற்போது தொடர் மழை காரணமாக தண்ணீர் அதிகமாக விழுகிறது.

ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்பதுதான் பிரச்னை. தொடர் மழையால் அதிக தண்ணீர் விழுந்தால் எவ்வாறு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழும். எனவே மழையும் தண்ணீர் வரத்தும் கட்டுக்குள் வரும் வரை ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தடை விதிக்கப்படுகிறது.