Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து அடிப்படை வசதிகளுடன் ராயபுரம் புதிய பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருவொற்றியூர்: அனைத்து அடிப்படை வசதிகளுடன் ராயபுரம் புதிய பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும், என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. இந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரத்திற்கு மாற்றப்பட உள்ளது. பின்னர் அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அதேபோல், பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து, ராயபுரம் மேம்பாலம் அருகே தற்காலிகமாக அமைய உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

ஒட்டுமொத்த அரசு துறைகளும் ஒருங்கிணைத்து வடசென்னையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முதலமைச்சரால் தொடங்கப்பட்டது வடசென்னை வளர்ச்சி திட்டம். இதன் ஒரு பகுதியாக பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். சுமார் ரூ.820 கோடி செலவில் பிராட்வே புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வெகுவாக முடக்கிவிடுவது தொடர்பாக தற்போது ஆய்வு செய்தோம்.

பிராட்வே பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து 3 முறை அந்த வியாபாரிகளை அழைத்து கூட்டங்களை நடத்தி உள்ளோம். பிராட்வே பேருந்து நிலையத்தில் சாலையோரம் வசிப்பவர்களில் நிரந்தர குடியிருப்பு இல்லாதவர்களின் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 41 குடும்பங்கள் அங்கு குடியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஏதாவது விடுபட்டிருந்தால் முறையான ஆவணங்களை கொடுத்தால் அவர்களையும் திட்டத்தில் சேர்த்துக்கொண்டு மாற்று இடம் வழங்கப்படும். சாலையோரம் மக்களை எந்த காலத்திலும் யாரும் சிந்தித்தது இல்லை, நம் முதலமைச்சர்தான் 40 ஆண்டுகளுக்கு மேல் சிதலமடைந்த நிலையில் இருக்கும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு மறுகட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் 4 அடுக்கு மாடிகளாக இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் பரப்பளவு ஒரு குடும்பத்திற்கு 225 சதுரடி இருந்த நிலையை மாற்றி 400 சதுர அடி, 410 சதுர அடி என்ற வகையில் தற்போது மறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருக்கும் வீடுகளை விட கூடுதலான குடியிருப்புகளை உருவாக்கி அந்த வீடுகளை சாலையோரம் வசிப்பவர்கள், வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1,500 குடியிருப்புகளை கட்ட டிசம்பர் 15ம் தேதிக்குள் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். அனைத்து அடிப்படை வசதிகளுடன் ராயபுரம் புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக விரைவில் செயல்பாட்டுக்கு வரும். ரூ.110 கோடி செலவில் தீவுத்திடலில் ஒரு பிரமாண்ட திட்டத்தை வடிவமைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

அகவே அந்தப் பணிகள் தீவுத்திடலில் நடைபெறுவதால் தற்காலிக இடமாக ராயபுரம் மேம்பாலம் அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவும் வடசென்னையில் மையப்பகுதி. போக்குவரத்து பயணிகளுக்கு இந்த இடம் உகந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன், பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.