*பொதுமக்கள் அவதி
குன்னூர் : குன்னூர் அருகே நிழற்குடையில் சமூக விரோத செயல்கள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் நிழற்குடை உள்ளது.
குறிப்பாக குன்னூர் நகர மக்கள், உயிரிழந்தவர்களின் உடலை அப்பகுதியில் அடக்கம் செய்வது வழக்கம். இதனை கருதி மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏதுவாக அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது.
குன்னூர் அரசு மருத்துவமனை பிணவறையின் கீழ்புறம் இந்த நிழற்குடை உள்ளது. சாலையோரத்தில் உள்ள இந்த நிழற்குடைக்குள் வாகனங்களில் வரும் சில நபர்கள் பகல் நேரங்களிலேயே மது அருந்துவது உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால், அந்த சாலையில் பெண்கள் பெரும் அச்சத்துடன் நடந்து செல்வதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். சில போதை ஆசாமிகள் சாலையில் செல்லும் நபர்களை கிண்டல் செய்வதும், வயது முதிர்ந்தோர்களை தடியால் அடிப்பதும் போன்ற வன்முறைகள் அதிகரித்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள நிழற்குடைக்குள் மது அருந்தும் நபர்களை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.