மணிப்பூரில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், தெங்னவுபால் மற்றும் சண்டெல் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், மிரட்டி பணம் பறித்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கங்லெய்பாக் கம்யூனிஸ்டு கட்சி என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று, தெங்னவுபால் மாவட்டத்தில் 2 அமைப்புகளை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டார். இம்பால் மேற்கு மாவட்டத்தில் செங்கல் சூளையில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மிரட்டலில் ஈடுபட்டு பணம் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சண்டெல் மாவட்டத்தில் ஒருவரை கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் கே.சி.பி. இயக்க பயங்கரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன்படி, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.