வங்கியில்ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக திருப்பூர் பல் டாக்டரிடம்ரூ.70 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை
கோவை: திருப்பூர் கல்லூரி சாலை திருவிக நகரை சேர்ந்தவர் கிஷோர்குமார் (45). டாக்டர். இவர் திருப்பூர்- அவிநாசி சாலை புஷ்பா தியேட்டர் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். மேலும் சென்னை, கோவையில் இதன் கிளை உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டார். அதற்கு வங்கி கடனுக்கு முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது சக்திவேல், ஒரு ரூபாய் வட்டி விகிதத்தில் வங்கியில் ரூ.15 கோடி பெற்று தருவதாக உறுதியளித்தார். மேலும் இதற்கு கமிஷன் பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 22.12.2023 முதல் 5.9.2024 வரை டாக்டர் கிஷோர்குமார் ரூ.69.75 லட்சத்தை கமிஷன் தொகையாக சக்திவேலிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்டநாட்கள் வங்கியில் கடன் பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கிஷோர்குமார், சக்திவேலிடம் பணத்தை திருப்பி கேட்டார். கொடுக்க மறுத்து மிரட்டினார். இதுகுறித்து கிஷோர்குமார். கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.